வேலூர்க் கோட்டை
வேலூர்க் கோட்டை (Vellore Fort) 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் இக்கோட்டை அமைந்துள்ளது.
கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக் கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக் கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் என்பனவும் உள்ளன.
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது.
நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் , திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்,இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.