நீர்மகால்
நீர்மகால் (Neermahal, Water palace) என்பது, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள உருத்திரசாகர் ஏரியில் அமைந்துள்ள ஒரு அரச மாளிகை. இது, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரிபுரா மன்னராட்சிப் பகுதியின் அரசராக இருந்த வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் என்பவரால் 1930ல் தொடங்கப்பட்டு 1938ல் கட்டி முடிக்கப்பட்டது. திரிபுராவின் தலைநகரமான அகர்தலாவில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெலாகர் என்னும் இடத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இந்தியாவில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள இரண்டு மாளிகைகளுள் ஒன்றான இந்த மாளிகை இந்து, முசுலிம் கட்டிடக்கலைப் பாணிகளின் கலப்புப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வகை அரண்மனைகளில் இந்தியாவிலேயே பெரியது இதுவாகும். அதேவேளை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே இவ்வகை அரண்மனையும் இதுவே. திரிபுராவின் ஏரி மாளிகை என அறியப்படுகின்ற நீர்மகால், அரச குடும்பத்தினரின் கோடைகால வதிவிடமாகப் பயன்பட்டது.