பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம்
பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம்

பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் (Ten Thousand Buddhas Monastery) என்பது ஒரு பௌத்த விகாரையாகும். இந்த விகாரை ஹொங்கொங், சா டின் மாவட்டத்தில் "பய் டவ் கிராமம்" எனும் கிராமத்தில் உள்ளது. பத்தாயிரம் புத்தர்கள் மடலாயம் என்பதன் பொருள், மடாலயத்திற்கு செல்லும் பாதையின் இருபக்கமும், ஆரம்பம் முதல் மடாலயம் வரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பௌத்தப் பிக்குகளின் சிலைகள் கட்டப்பட்டிருப்பதே ஆகும். மொத்தம் 12,000 சிலைகள் உள்ளன.


உண்மையில் இந்த பௌத்த விகாரை "மடாலயம்" என்று அழைக்கப்பட்டாலும், சாதாரணமாக பௌத்த பிக்குகளுக்கும் பிக்குனிகளுக்கும் வசிப்பதற்கு அமைக்கப்பட்ட ஒரு மடமாக இல்லை.


1933ம் ஆண்டுகளின் வணக்கத்திற்குரிய "யுவட் கை" எனும் சீனப் பௌத்த பிக்கு சீனாவில் இருந்து வருகைத் தந்திருந்தார். அவரே 1951ம் ஆண்டில் இந்த பத்தாயிரம் புத்தர்கள் மடாலயத்தைக் கட்டியவர் என அறியப்படுகிறது. அவர் பௌத்த போதனைகளை உள்ளூர் மக்களுக்கு போதிக்க என்று வந்தவர், பௌத்த கல்லூரி ஒன்றை இங்கு நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளார். அக்காலக்கட்டத்தில் சா டின் பகுதியில் முன்னாள் பௌத்தராக இருந்த ஒரு வணிகரிடம் இருந்து நிலத்தை பெற்ற இவர், இந்த பத்தாயிரம் புத்தர்கள் மடாலயத்தை 1949களில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். இந்த மடாலயம் கட்டுமானப் பணி ஆரம்பத்தின் போது போதிய வசதிகள் இன்மையால், இவரும் இவரது சீடர்களுமாக கட்டுமானப் பணிக்கான பொருட்களை கடும் உடல் உழைப்பின் பயனாகவே தூக்கிச் சென்று கட்டினராம். இதன் முதல் கட்டுமானப் பணிகள் எட்டு ஆண்டுகளில் நிறைவுற்றன.


வழிபாட்டு முறை

பிக்குகள் சிறிய பறைகளை அடித்தவண்ணம், பாளிமொழியில் "பண" சொல்கின்றனர். பௌத்தர்கள் நின்று வழிபடுகின்றனர். முழங்கால் இட்டு வணங்கும் முறை இலங்கை, இந்திய முறைகளில் இருந்து வேறுபடுகிறது. முழங்கால் இடும் போது கால்கள் வலிக்காமல் இருப்பதற்கு சதுர வடிவிலான ஒரு பஞ்சணை போடப்பட்டுள்ளது. அதன்மீது கால்களை முழங்காலிட்டு வழிபடுகின்றனர். பின்னர் வரிசையாகச் சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.