மாமல்லபுரம்
மாமல்லபுரம்

மாமல்லபுரம் (ஆங்கிலம்:Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.


மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.


மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.

மண்டபங்கள்

பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.

கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.


மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:

வராக அவதாரம்|வராக மண்டபம்
மகிடாசுரமர்த்தினி மண்டபம்
இராமானுச மண்டபம்
மும்மூர்த்திகள் மண்டபம்
கோடிக்கல் மண்டபம்
கோனேரி மண்டபம்
அதிரணசண்ட மண்டபம்

இரதங்கள்

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.


மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:

பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்
வலையன்குட்டை இரதம்
பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
கணேச இரதம்

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 – 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

தர்மராச இரதம்


மாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும்.

தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும்.

முதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 14 சிவன் வடிவங்கள். இதில் கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும் என்றாலும், மிக வித்தியாசமாக இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளனர். பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக் கோயில்கள்


மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.

புடைப்புச் சிற்பத் தொகுதிகள்

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:

அருச்சுனன் தபசு

கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)

விலங்குகள் தொகுதி

இவைத்தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.