ஒரே ஓவரில் 35 ரன்களை எடுத்து அசத்திய ஷ்ரேயாஸ்
இந்தூரில் சையத் முஷ்டாக் அலி ட்ராபி உள்நாட்டு டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் அஜிங்கிய ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரஹானே 9 ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர், சூரிய குமார் யாதவ் ஜோடி 14 ஓவர்களில் 213 ரன்களை குவித்தனர். சூரியகுமார் யாதவ் 63, ஷ்ரேயஸ் அய்யர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 147 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் ரிஷப் பந்த்தின் அதிகபட்ச டி20 ஸ்கோரான 128 நாட் அவுட்டை முறியடித்து சாதனை படைத்தார் ஷ்ரேயாஸ். இந்த இன்னிங்சில் சிக்கிம் மிதவேகப்பந்து வீச்சாளர் டாஷி பல்லாவின் ஒரே ஓவரில் 35 ரன்களை எடுத்தார் ஷ்ரேயாஸ். இதுவரை முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள்தான் அதிக சிக்சர் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் முறியடித்தார்.