இந்திய அணியின் மெகா வெற்றிக்கு உதவிய கேப்டன் ரூட் செய்த 3 மிஸ்டேக்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தின் இறுதி நாள் (5ம் நாள்) மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. எனவே, இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்திய அணி. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லி (0) இருவரும் இந்திய வேக தாக்குதலில் டக்-அவுட் ஆகி வெளியேறினர். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய பேட்ஸ்மேன் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்னில் வெளியேற்றப்பட்டார். பின்னர் அடுத்தடுத்து களம் கண்ட வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இப்படி தொடர் விக்கெட் சரிவை சந்தித்து ஊசலாடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சின் 51.5 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்திய அணி இந்த மெகா வெற்றியை ருசிக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒரு முக்கிய காரணம் என்றால் நிச்சயம் மிகையாகாது. ஏனென்றால் அவர் செய்த 3 தவறுகள் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதோடு, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தோல்வியை தழுவவும் செய்தது.

முதல் தவறு – 5ம் நாள் ஆட்டம் (1 வது அமர்வு): இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்தது

3ம் நாள் ஆட்ட நேரத்தில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பும்ரா நெருக்கடி கொடுத்து தடுமாற செய்தது போல், நேற்று 5ம் நாள் ஆட்ட நேரத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்திருந்தார் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட். இதில் ரூட் தோல்வியை தழுவினார் என்றே குறிப்பிடலாம். ஏனென்றால், ரிஷப் பண்டின் விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த பும்ரா – ஷமி ஜோடியை உடைக்க ஆண்டர்சனை பயன்படுத்தாமல் ஒல்லி ராபின்சனை தேர்வு செய்தார் ரூட். மேலும் ஆண்டர்சனுக்கு காலை சேஷனில் அதிக ஓவர்கள் கொடுக்கவே இல்லை.

ஒல்லி ராபின்சன் வீசிய பந்துகளில் 2 சதவீதம் மட்டுமே லென்தி பந்துகளாக இருந்தன. இந்த தவற்றை கேப்டன் ரூட்டே ஆட்ட நேர இறுதியில் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து ஆச்சரியப்பட்டு பேசிய போட்டியின் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான மைக்கேல் ஹோல்டிங், “ஆண்டர்சனுக்கு பதிலாக ஏன் மற்ற வீரர்களுக்கு ஓவர் கொடுக்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மதிய இடைவேளை வரை களத்தில் படு பயங்கரமாய் மட்டையை சுழற்றிய பும்ரா – ஷமி ஜோடி ஆட்டத்தில் ஒரு முறை தடுமாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் தவறு – 4ம் நாள் (இறுதி அமர்வு) ஆட்டத்தை நிறுத்த முடிவு

போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தின் இறுதி அமர்வில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடித்த இந்திய வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் இஷாந்த் ஷர்மா வெளிச்சமின்மையால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நடுவர்களிடம் புகார் அளிக்க பால்கனியில் இருந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அந்த வீரர்களுக்கு கடுமையாக சைகை செய்தனர்.

இதற்கிடையில், செம்ம பார்மில் இருந்த மொயீன் அலி பந்தை துல்லியமாக சுழல விட்டு பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இந்த அழுத்தம் நிறைந்த தருணத்தில் மொயீன் அலி வைத்து தொடர் நெருக்கடி கொடுப்பதற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களை பந்து வீச அழைத்தார் ரூட். இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய அணி வெளிச்சமின்மையை காரணம் காட்டியது. எனவே ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடுவர் அறிவித்தார்.

இது குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு ஆட்ட நாள் முடிவில் பேசிய சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி, “அணியில் ஒரு சாரார் போட்டியை தொடரலாம் எனவும், மற்றொரு சாரார் போட்டியை நிறுத்திக்கொள்ளலாம்” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் மொயீன் அலியை வைத்தே தொடர் தாக்குதலை கேப்டன் ரூட் தொடுத்திருக்கலாம். ஏனென்றால், பண்ட் மொயீன் அலி பந்து வீச்சில் நிறையவே தடுமாறி இருந்தார். மேலும் அந்த நாளில் போதுமான ஓவர்கள் மீதம் இருந்தன. அதோடு ஒரு ஓவரில் அதிக ரன்களை அடிக்க விட்டிருந்தாலும் கூட அடுத்தடுத்த ஓவர்களில் எளிதாக விக்கெட் எடுத்திருக்கலாம்.

தவறு 3 – 3ம் நாள்(இறுதி அமர்வு): ஆண்டர்சனை ஆட்டமிழக்க செய்தது

3ம் நாள் ஆட்டத்தின் இறுதி அமர்வில் இந்திய அணி மிக உக்கிரமாக பந்துகளை வீசி தாக்குதல் தொடுத்தது. அப்போது களத்தில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஆண்டர்சன் இருந்தனர். பும்ரா வீசிய பந்து ஆண்டர்சன் ஹெல்மட்டை பதம் பார்க்கவே, சில நிமிடங்களுக்கு தலை சுற்றியவர் போல் ஆனார் ஆண்டர்சன். பிறகு அவருக்கு மூளையதிர்ச்சி சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் தான் ஆடியே தீருவேன் என்பதில் ஆண்டர்சன் பிடிவாதமாக இருந்தார்.

ஆட்ட நேரத்தின் கடைசி ஓவரில் ரூட் முதல் மூன்று பந்துகளை விளையாடினார். தொடர்ந்து வீசப்பட்ட பந்துகளை தடுத்து நிறுத்தி, அடுத்த நாள் ஆட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்க மறுத்த ரூட் 4வது பந்தை சிங்கிள் தட்டினார். இது ஏற்கனவே சோர்வில் இருந்த ஆன்ட்ரசனை ஆட்டமிழக்க வழிவகுத்தது. ஒரு சிறந்த பேட்ஸ்மேன் சற்று யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் மறுநாள் ஆட்டத்தை சுறுசுறுப்பாக தொடங்க அது உதவி இருக்கும். மேலும் இந்த ஜோடி தொடர்ந்து ஆடி இருந்தால் அந்த அணி 50 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கும். ரூட் இப்படி சொதப்பியதால் அது 27 ஆக குறைக்கப்பட்டது. தவிர, ஓவர் முடிய 2 பந்துகளே மீதமிருந்த நிலையில் ரூட் ஏன் அந்த சிங்கிள் ஆடினார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.