மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து - ‘இந்த 3 வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் அசத்துவார்கள்’
இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை காரணமாக கிரிக்கெட்டில் பல தொடர்கள், மற்றும் போட்டிகள் என அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதோடு, ரத்தும் செய்யப்பட்டன. இதில் இந்திய மண்ணில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், மற்றும் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரும் உள்ளடங்கும்.
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. எனவே, 7வது டி20 உலகக்கோப்பை தொடரும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடரில், அதன் முதலாவது தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. இருப்பினும், அதன்பிறகு நடந்த ஒரு டி20 உலக கோப்பையை கூட இந்திய அணி கைப்பற்றவில்லை. இந்த உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை வென்றுள்ள நிலையில், இந்திய அணியும் 2வது முறை வெல்ல நிச்சயம் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. தவிர, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வெல்லவில்லை. எனவே, இந்திய அணி கடுமையாக முயற்சித்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தயார் படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியும் டி20 உலக கோப்பைக்கான அணியை உருவாக்க உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி வீரர்களில் நிறைய பேர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அணியின் தேர்வு எவ்வாறு அமைய போகிறது என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடருக்கான வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர்கள் ஜொலிப்பார்கள் என்பது குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி எதிர்வரும் டி20 உலக கோப்பையில் 3 வீரர்கள் நிச்சயம் இந்த தொடர் முழுவதும் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கலஸ் பூரன், இரண்டாவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், மூன்றாவதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகிய வீரர்களை தெரிவு செய்திருக்கிறார்.
இந்த 3 வீரர்களை தாம் தேர்வு செய்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், “என்னை பொறுத்தவரை பூரான் ஒரு ஸ்பெஷலான பிளேயர். அவரது கிரிக்கெட் கரியர் முடியும்போது நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் ஒரு மகத்தான வீரராக இருப்பார். அவரது பேட் ஸ்விங் அபாரமாக உள்ளது. நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னுக்கு கொண்டு செல்வார்.
ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய பலமே அந்த அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் தான். போட்டியின் துவக்கத்தில் இரண்டு ஓவர்கள், இறுதியில் இரண்டு ஓவர்கள் என தனது ரிதத்தை பிடித்து விட்டால் நிச்சயம் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்யும் வல்லமை கொண்டவர்.
பெரிய தொடர்களை வெல்ல வேண்டும் எனில் நிச்சயம் ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர் அணிக்கு தேவை. அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் ரன் ரேட்டை உயர்த்தும் ஒரு வீரராகவும் ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். அவர் எந்த பவுலரின் பந்தையும் மைதானத்தின் எந்த ஒரு மூலைக்கும் அடிக்கக்கூடிய ஒரு வீரர்.” என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.