அரசின் சிறப்பு திட்டம் துவக்கம் - 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடலாம்
கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர, சிறப்பு முகாம்கள் நடத்தி அதன்மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். சுகாதார ஊழியர்களின் பரிசோதனைக்கு பிறகு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதேபோல சென்னையில் உள்ள ஆர்ஜிஜிஜிஎச், ஓமந்துரார், ஸ்டான்லி, ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் போன்ற ஐந்து முக்கிய அரசு மருத்துவமனைகளில் முழு நேர தடுப்பூசி மையம் செயல்பட உள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ” தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் 24 மணி நேர தடுப்பூசி திட்டம் செயல்படும். மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இரவில் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் இரவு வரை வேலை செய்யும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

சென்னையில் முதியவர்களுக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ குழு கொண்ட 15 வாகனங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் 2கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மீதியுள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த மேலும் 9கோடி டோஸ் தேவைப்படுகிறது. சென்னையில் இதுவரை மொத்தம் 35.68 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை 25.14 லட்சம் பேருக்கும், 2-ம் தவணை 10.54 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.