தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை சென்னையில் அவருடை இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார். எளியோர்களின் துயர் துடைக்கும் மனம் வாய்ந்தவர் விஜயகாந்த் என்று அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி பிரேமலதா, மகன்கள் உடன் கொண்டாடினார். முன்னதாக, அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதால், கட்சி தொண்டர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
தேதிதிக தலைவர் விஜயகாந்த், 3 முறை எம்.எல்.ஏ-வாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். சில ஆண்டுகளாக அவர் உடல்நிலை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது: “தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டடிகொண்டிருக்கும் தேமுதிக நிறுவனர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த்துக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘வறுமை ஒழிப்பு என்பது இயக்கமாக மலர வேண்டும்’ என்ற குறிக்கோளை மனதில் ஏந்தி ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்றளவிலும் வழங்கிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் நூறு வயது கடந்து பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும். விஜயகாந்த்தின் நற்பணி தொடர எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு விசிக சார்பில் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தேன். பிரேமலதா விஜய்காந்த்திடம் அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்தேன். அவர் நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.” என்று திருமாவளவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.