ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பிரபல பரதநாட்டியக் கலைஞருக்கு அனுமதி மறுப்பு...  கமிஷனரிடம் புகார்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அரசின் கலைமாமணி விருது பெற்ற ஜாகீர் உசேன், இஸ்லாமியர் என்ற அடிப்படையில் சனிக்கிழமை மதியம் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒருவர் தன்னைத் தடுத்து நிறுத்தியதாகக் தெரிவித்துள்ளார்.

“நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் வைணவ மதத்தை நம்பினாலும், நான் பிறந்த மதத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட அவமானத்தை சந்தித்தது இதுவே முதல் முறை.” என்று ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.

பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜாகீர் உசேன், திருச்சி காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், கோவில் நிர்வாகத்தில் எந்தப் பதவியும் வகிக்காத ரங்கராஜன் நரசிம்மன் என்ற நபர், பல பக்தர்கள் முன்னிலையில் என்னைத் தடுத்து நிறுத்தினார் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஏற்படுத்திய மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக சிறிது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரங்கராஜன் நரசிம்மனிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியதற்கு, “​​”என் மீது புகார் அளிக்கப்பட்டால் அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறினார்.

அதே நேரத்தில், பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அவருடைய மதத்தின் காரணமாக வழிபடுவதை தடுத்து நிறுத்தியது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசனம் செய்யச் சென்றபோது, அவரை மோசமாக நடத்தியது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தடுத்து நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துலுக்க நாச்சியாருக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட ஸ்ரீரங்கம் பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.