ஐ.டி துறை வேலைவாய்ப்பை அதிகரிக்க ஆய்வு... அமைச்சர் மனோ தங்கராஜ்...
கொரோனா பாதிப்பு இல்லாத துறைகள் இல்லை. இந்த சூழலிலும் ஓரளவு தன்னை தற்காத்துக் கொண்ட துறை, தகவல் தொழில்நுட்பத் துறை. இந்தத் துறையினர் முழுமையாக பணிக்கு திரும்புதல் தொடர்பான நிகழ்வு சென்னை தரமணியில் அமைந்துள்ள ஐ.டி பார்க்கில் 09 டிசம்பர் அன்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஐ.டி. செகரட்டரி நீரஜ் மிட்டல், ஐ.ஏ.எஸ்., எல்காட் எம்.டி. அஜய் யாதவ், ஐ.ஏ.எஸ்., இன்போசிஸ் மையத் தலைவர் சூர்யநாராயணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவுடன் ஆன்லைன் போர்டல் அமைப்பதைக் குறித்தும் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டு கலந்துரையாடினர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகில் எல்லா விதத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கல்வி, மக்களின் வேலைவாய்ப்பிலிருந்து அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி வரை அனைத்து விதத்திலும் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஊரடங்கு வலுப்படுத்திய நேரத்திலிருந்து ஊழியர்களும் முதலாளிகளும் தங்களின் சவாலை சந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இதில் ‘வீட்டில் இருந்து வேலை’ (Work from Home) என்ற மாற்றம் பலரின் வேலையையும் வருமானத்தையும் காப்பாற்றியது என்றே சொல்லலாம்.
இதில் அதிகம் சோர்வடையாமல் நிர்வகித்த துறை என்றால் தகவல் தொழில்நுட்பத்துறை தான். ஆனால், இது பிற துறைகளுக்கு எளிய பயணமாக அமையவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஐ.டி.துறை நிறுவனங்கள் கோவிட் 19 காலம் முடிந்து பணிக்கு திரும்புதல் குறித்து, அமைச்சரோடு பிற நிறுவனங்கள் கலந்துரையாடியபோது:
இதைப்பற்றி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், “வருடந்தோறும் தமிழ்நாட்டில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வெளியேறுகின்றன; ஆனால் அனைவருக்கும் இங்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை; ஏனென்றால் தற்போது நிலவும் சர்வதேச சந்தையில், படிப்பைத் தாண்டி திறமைசாலிகளை மட்டும் தான் தேர்ந்தேடுகின்றனர்.
நான் சமீபமாக ‘தீர்வு தளத்திற்கு’ சென்றிருந்தபோது, அங்கு ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலை தேடுபவர்கள் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்; இதில் பலபேர் பட்டதாரிகள் என்பது மிகவும் வருத்தமளித்தது; படிப்பு இருந்தும் திறமை, சீரான மொழிப்புலமை இல்லாத நபர்களுக்கு வேலை வழங்க எந்த நிறுவனமும் முன்வருவதில்லை.
இதில் கொரோனா பெருந்தொற்று பரவலையொட்டி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துவது எப்படி நடைமுறைக்கு உதவும் என்று தெரியவில்லை.” என்று கூறுகிறார்.
இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வதற்காகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கக் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்களை மேம்படுத்த என்னென்ன மாற்றங்கள் பரிந்துரை செய்யலாம் என்று விவாதிக்கலாம். தற்போது இருக்கும் கொள்கைகளை புதுப்பிக்கவும், வருங்காலத்தில் சிறந்த கொள்கைகளுடன் வருவதற்கும் இந்த போர்டல் உதவும் என்று கூறுகின்றனர்.
மக்களின் வேலைவாய்ப்பும், பொருளாதாரத்தின் மேம்பாடும் வலுவடைய மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் எங்கள் முழு முயற்சியை மேற்கொள்கிறோம் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் கொரோனா தடுப்பூசி போடுவதை அரசாங்கம் கடுமையாக மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் ஏனென்றால் பலபேர் இன்னும் தடுப்பூசி போடவில்லை, இதனால் வேலைகளும் பள்ளி கல்லூரிகளும் திறப்பதில் தாமதம் ஆகிறது” என்று கலந்துரையாடலில் ஒருவர் கூறியபோது, அமைச்சர் மனோ தங்கராஜ் “நானும் நேற்று தான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” என்று கூறியது தான்.