தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான்...
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9195 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 77, 002-ஆக உள்ளது. இதுவரை 241 நபர்கள் ஒமிக்ரான் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும், கேரளாவில் 65 பேருக்கும், தெலுங்கானாவில் 62 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 619 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 11 பேரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களும் அவர்களின் உறவினர்களாகவும் உள்ளனர்.
ஏற்கனவே 24 பேர் உடல் நலம் தேறி வீட்டிற்கு சென்ற நிலையில் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இரண்டு பேர் கேரளா மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 9 பேருக்கும், மதுரையில் நான்கு பேருக்கும், திருவண்ணாமலையில் இருவருக்கும் செங்கல்பட்டு, குமரி, சேலம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவசர பயன்பாட்டு அனுமதியை பெற்ற புதிய மூன்று மருந்துகள் என்ன?
இந்திய அரசு, ஹைதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் (Corbevax) தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட ஆர்.பி.டி. புரத துணை அலகு (RBD protein sub-unit) தடுப்பூசி இதுவாகும்.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் நானோ பார்ட்டிக்கிள் ப்ரோட்டினை அடிப்படையாக கொண்ட மற்றொரு தடுப்பூசி கோவோவேக்ஸ்-க்கும் (Covovax) இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவேக்ஸ் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மாத்திரை வடிவ மருந்தான மோல்னுபிரவிருக்கும் (Molnupiravir) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உஷார் நிலையில் டெல்லி
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இரவு நேர ஊரடங்கை ஒரு சில மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அன்று டெல்லி முதல்வர் பல்வேறு தடைகளை அமல்படுத்தி டெல்லியின் நிலையை “மஞ்சள் அலெர்ட்” என்று வரையறுத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டது. பொது போக்குவரத்தில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.