கூட்ட நெரிசலில் 12 பேர் பலி... மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த வைஷ்ணவதேவி கோயில்...
ஜம்மு காஷ்மீர் சுத்ராவில் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. அதிகாலை 3 மணியளவில் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் கூடியதில், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த 13 பேர், நாரயணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தோரின் விவரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தீரஜ் குமார் (26), ஸ்வேதா சிங் (35), வினய் குமார் (24), சோனு பாண்டே (24), மம்தா (38), தரம்வீர் சிங் (35), வனீத் குமார் (38), மற்றும் டாக்டர் அருண் பிரதாப் சிங் (30) ஆகும்.

பவன் பகுதியில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தியதை தொடர்ந்து தான், மக்கள் அலைமோதியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 25 ஆயிரம் பேர், கோயிலுக்கு தரிசக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இச்சம்பவம் குறித்து உள் துறை முதன்மைச் செயலாளர், ஜம்மு ஏடிஜிபி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார்.