பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம்...
யூடியூப்- உலகின் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம். இணையத்தை பற்றி ஓரளவு தெரிந்த அனைவரும் இதை பயன்படுத்துகிறார்கள்.

யூடியில் ஒருவர் எதையும் கற்றுக்கொள்ளலாம், தங்களை மகிழ்விக்கலாம், சமீபத்திய இசை வீடியோக்கள் மற்றும் டிரெய்லர்களைப் பார்க்கலாம். யூடியூப் பயன்படுத்துவதற்கான வழிகள், நடைமுறையில் முடிவற்றவை.

யூடியூப் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், அது இந்தியாவில் பிரபலமானது,  2015க்கு பிறகு தான். ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக, மூன்று மாத இலவச நெட் சேவையை அறிவித்தது. அதுவரை இணையம் என்பது காஸ்ட்லி ஆக இருந்த அனைவரது வாழ்விலும் அதன்பிறகு, கூகுள், இணையதளம் எல்லாம் சர்வ சாதரணமாக மாறிவிட்டன. அதற்கேற்ப ஆண்ட்ராய்டு போன்களின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியது.

அப்போது தான் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் யூடியூப் சேனல்கள் பிரபலமடைந்தன.

தமிழகத்தில் டிவி தொலைக்காட்சி, செய்தி சேனலுக்கு நிகராக யூடியூப் தளங்களும் அசுரமாக வளர ஆரம்பித்தது. யூடியூப் வளர்ச்சியை பார்த்த பல மீடியா கம்பெனிகளும் இனி எதிர்காலம் டிஜிட்டல் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து யூடியூபில், தங்களுக்கென கணக்கையும் ஆரம்பித்தனர்.

இப்படி தமிழகத்தில் டிவி சீரியல்களுக்கு நிகராக, யூடியூபிலும் பொழுது போக்கு சேனல்கள் பிரபலமடைய ஆரம்பித்தன. பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர், இளம்பெண்களை குறிவைத்து அவர்கள் செய்த ஒவ்வொரு வீடியோ கண்டெண்ட்களும் யூடியூபர்களுக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்துக் கொடுத்தன.

குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஊரடங்குக்கு பிறகு, வீடுகளுக்குள் முடங்கியிருந்த பல செலிபிரிட்டிகளும் தங்களுக்கென யூடியூப் சேனல்களை ஆரம்பித்து அதில், தங்களின் அன்றாட வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர்களை பல லட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாரதவிதமாக தமிழகத்தில் நேற்று நள்ளிரவு, யூடியூப் தளத்தில் பிரபலமான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள் உள்ளிட்ட பல யூடியூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டன. 15க்கும் மேற்பட்ட சேனல்கள் முடக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில தனி யூடியூபர்களின் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட அனைத்து சேனல்களிலும் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து சேனல்களிலும் இதற்கு முன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஹேக் செய்யப்பட்ட சம்பவம் குறித்து,  யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் சார்பாக, யூடியூப் தளத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹேக் செய்யப்பட்ட பிரபல யூடியூப் சேனலின் சப்ஸ்கிரைபர்களும், கருத்து தெரிவித்துள்ளனர். அதில், ”யூடியூபில் வரும் பணம் பத்தாது என தனியாக ஆப் ஒன்று தயார் செய்து காசு கேட்டீங்க. சேனல் வளரும் வரை, வீடியோக்களை ஃப்ரீயாக அப்லோட் செய்து. இப்போ வளர்ந்த பிறகு காசு கொடுத்து தான் வீடியோ பாக்கணும் சொல்றீங்க. அதான் யாரோ கடுப்புல ஹேக் பண்ணிட்டான். மறுபடியும் பிரச்சனை சரிசெய்த பிறகாவது ஒழுங்கா ஃப்ரீயா வீடியோ அப்லோட் பண்ணுங்க”  என சப்ஸ்கிரைபர்ஸ் தங்கள் மனக்குமறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னதாக இதேபோல் தமிழ் கேமிங் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.