பெண்களிடம் கைவரிசை… உதயநிதி ஸ்டாலின் பி.ஏ என நாடகமாடிய ஆசாமி கைது...
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என்று கூறி பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் தற்போது சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவடடம் செவ்வாத்தூர் அருகே புதுரை சேர்ந்த தேன்மொழி என்ற பெண் முதுகலை பட்டம் பெற்று வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தனது தோழி மூலம் ராஜேஷ் என்பரின் அறிமுகம் கிடைத்து நாளடைவில் அவரிடம் தனக்கு வேலை வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இதற்கு ராஜேஷ் தனக்கு அரசியல்வாதிகள் பலரை தெரியும். பணம் கொடுத்தால் நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய தேன்மொழி கடந்த 2018-ம் ஆண்டு 4.50 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ்  அதன்பிறகு வேலை தொடர்பான எவ்வித தகவலும கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த தேன்மொழி வேலை தொடர்பாக ராஜேஷிடம் கேட்டபோது, இன்னும் சிலரிடம் இருந்து அரசு வேலை என்று சொல்லி பணம் வாங்கி வா மொத்தமாக அனைவருக்கும் வேலை வாங்கி கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நினைத்த தேன்மொழி தனது உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் இருந்து அரசு வேலைக்காக பல லட்ச ரூபாயை வாங்கி வந்து ராஜேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ் முன்பு போலவே எவ்வத தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தேன்மொழியிடம் பணத்தை கொடுத்தவர்கள் வேலை வாங்கி கொடு அல்லது பணத்தை திரும்ப கொடு என்று கேட்டுள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேன்மொழி ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர், தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் ராஜேஷ்க்கு போன் செய்த தேன்மொழி பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது ராஜேஷ் தான் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என்றும், என்மேல் புகார் அளித்தால் உனக்குதான் ஆபத்து என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆடியோ பதிவு இணையத்தில் வைராலாக பரவியதை தொடர்ந்து தற்போது ராஜேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதும், அவர் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளரும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகினறனர்.