முதல் தமிழ் படமாக இடம்பிடித்து சாதனை... ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில்  ஜெய் பீம்...
ஆஸ்கர் யூடியூப் சேனலில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார். ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவோடு, ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேனாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது பழங்குடியின மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தை உருவாக்கினார் இயக்குநர் ஞானவேல்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பாராட்டுகளைக் குவித்தது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படங்களில் முதலிடம் பிடித்ததோடு, திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி இணையதளத்திலும் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றப் படமாகவும் ‘ஜெய் பீம்’ முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது.

தற்போது ‘ஜெய்பீம்’ படத்துக்கு இன்னொரு கெளரவம் கிடைத்துள்ளது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் 12 நிமிட காட்சிகளும், இயக்குநர் ஞானவேல் படம் குறித்து பேசுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட கலைஞர்களின் உழைப்பை, ஒரு திரைப்படத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் #SceneAtTheAcademy என்ற தலைப்பில் ஆஸ்கர் அகாடமி உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தங்கள் பக்கங்களில் பதிவிட்டு உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதன்படி, இந்த #SceneAtTheAcademy-யில் தற்போது ஜெய் பீம் படத்தின் காட்சிகளும், இயக்குநரின் விவரிப்புகளும் 12 நிமிட காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆஸ்கரின் ட்விட்டர் பக்கத்திலும் அதைப் பகிர்ந்து, படத்தை பற்றியும் மேனாள் நீதிபதி சந்துருவின் முயற்சிகளை பாராட்டியும் பதிவிட்டப்பட்டுள்ளது

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கது.