ஶ்ரீராம காவியம் - தேவர் உலகத்து தேர்...
ஶ்ரீராம காவியம்
~~~~~
290
தேவர் உலகத்து தேர்...
★ராமர் இருக்கும் இடத்திற்கு முன்னேறிச் செல்ல விடாமல் இடையில் ராவணனை அவன் தம்பி விபீஷணன் தடுத்தான். ராவணன் மற்றும் விபீஷணன் ஆகிய இருவருக்கும் இடையே மிகக் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ராட்சத பரம்பரையை சேர்ந்தவர்கள். இருவரும் வலிமையானவர்கள். இருவருக்கும் நடந்த யுத்தம் கடுமையாகவும் கோரமாகவும் இருந்தது. ராவணனின் அம்புக்கு சரியான பதிலடி கொடுத்தான் விபீஷணன். ராவணன் தனது அஸ்திரங்களை விபிஷணன் மீது வேகமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தான்.
★விபீஷணன் உயிருக்கு ஆபத்து வர இருப்பதை கண்டு உணர்ந்த லட்சுமணன், ராவணனின் கொடிய அஸ்திரங்களுக்கு பதில் திவ்ய அஸ்திரத்தை தொடுத்து விபீஷணனை காப்பாற்றினான். இதனை கண்ட ராவணன் உனது அஸ்திரத்தால் விபீஷணனை காப்பாற்றி விட்டாய். ஆனால் இப்போது விபீஷணனுக்கு பதில் நீ உயிரை விடப்போகிறாய் என்று கூறி லட்சுமணனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். லட்சுமணனுக்கும் இலங்கேசன் ராவணனுக்கும் யுத்தம் மிகக் கடுமையாக நடந்தது. இறுதியில் ராவணன் அனுப்பிய ப்ருத்வி என்னும் அஸ்திரமானது இளவல் லட்சுமணனை மயக்கமுறச் செய்தது..
★வலிமையான அஸ்திரத்தால் அடிபட்டு விழுந்த லட்சுமணன் தொடர்ந்து யுத்தம் செய்ய இயலாமல் பூமியில் விழுந்தான்.
ராமர், லட்சுமணன் வீழ்ந்து கிடப்பதை கண்டதும் பதைத்தார். சுக்ரீவனிடமும் அனுமனிடமும் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அவனுடனேயே இருங்கள் என்று உத்தரவிட்டார்.
ராமர் லட்சுமணனின் உடலில் இருந்த அம்பை எடுத்து, அவன் காயத்திற்கு தேவையான மூலிகைகளை எடுத்து வருவாறு அனுமனுக்கு உத்தரவிட்டார். அனுமன் மூலிகையை எடுக்க விரைந்து சென்றார். மூலிகை வந்ததும் சரியான படி அதை உபயோகித்து லட்சுமணனை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று ஜாம்பவானிடமும் சுக்ரீவனிடமும் சொல்லிய ராமர், ராவணனை நோக்கி முன்னேறிச் சென்றார்.
★ராமருக்கும் ராவணனுக்கும் நடக்கும் யுத்தத்தை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் முனிவர்கள் பலரும் வந்தார்கள். ராமருக்கும் ராவணனுக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. ராவணன் தனது தேரில் இருந்து ராமரை சுற்றிய வண்ணம் தனது வலிமையை காட்டி யுத்தம் செய்தான். ராமர் கீழே நின்றபடி ராவணனுக்கு இணையாக யுத்தம் செய்தார். அப்போது வானத்தில் இருந்து நவரத்தினங்கள் மின்ன, தங்கத்தினால் செய்யப்பட்ட பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு ஒரு தேர் வந்து ராமரின் முன்பாக நின்றது.
★அங்கு விண்ணுலகத்தில் சிவபெருமான் தேவர்களை அழைத்து, இன்று இந்தப் போர் முடிந்துவிடும். ராவணன் இன்று மாள்வான். அதனால் ராமருக்கு, இந்திரனின் தேரைக் காட்டிலும் நிகரில்லாத வெற்றி பொருந்திய தேரை அனுப்புங்கள் என பணித்தார். இந்திரன் உடனே ஒரு தேரை தயார் செய்தார். அத்தேரை அனைத்து தேவர்கள் வணங்கி, இப்போரில் வெற்றி காண்பாயாக எனக் கூறி அதை வாழ்த்தி அனுப்பினர். அத்தேரை இந்திரனின் தேர்பாகனான மாதலியிடம் கொடுத்து ராமருக்கு அனுப்பினர். அந்தத் தேர்தான் ராமரின் முன்வந்து நின்றது. ராமர் அத்தேரை கண்டு திகைத்து நின்றார்.
★திடீரென தன்முன் வந்து நின்ற தேரைக் கண்டதும் திடுக்கிட்ட
ராமர் இது ராவணனின் மந்திர மாயமாக இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தார். ராமர், அத்தேரை பார்த்து இது நிச்சயம் அரக்கர்களின் மாயமந்திர வேலையாகத்தான் இருக்கும்
என நினைத்தார். ராமர், மாதலியை பார்த்து, நீ யார்? உன் பெயர் என்ன? எனக் கேட்டார்.
அப்போது தேரின் சாரதி ராமரை வணங்கி நின்று அவரிடம் பேச ஆரம்பித்தான்.
★மாதலி, ராமரை வணங்கி, என் பெயர் மாதலி. நான் இந்திரனின் தேர்ப்பாகன். சிவபெருமானும், பிரம்ம தேவனும் கட்டளையிட, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது. அத்தேரின் தேர்பாகன் நான் என்றான். பிறகு அத்தேரில் பூட்டியிருந்த குதிரைகள், மாதலி கூறிய அனைத்தும் உண்மையே என வேத மொழிகளால் உறுதி செய்தன. இந்த தேர் தாங்கள் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக தேவேந்திரன் அனுப்பியுள்ளான். இந்த தேரில் தங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளது. தேவேந்திரனின் தோல்வி என்பதை அறியாத சக்தி அஸ்திரமும் உள்ளது. இந்த தேரில் அமர்ந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து அவனை கொன்று வெற்றி பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டான்.
★பிறகு விபீஷணன் அங்கு வந்து, அத்தேரை உற்று நோக்கினான். ராமர், அனுமன், லட்சுமணன், விபீஷணனை பார்த்து இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? எனக் கேட்டார். அவர்கள் பெருமானே! இதில் சந்தேகப்பட ஒன்றும் இல்லை. இது இந்திரன் அனுப்பிய தேர் தான் என்றனர்.
பிறகு ராமர் இந்திரனின் தேரை வலம் வந்து வணங்கி தேரில் ஏறி அமர்ந்தார். தேவர்கள் வாழ்த்து மழை பொழிய, ராமர் போருக்கு புறப்பட்டுச் சென்றார்.
★அத்தேர் ராவணன் முன் வந்து நின்றது. ராவணனும் தேரை விரைந்து செலுத்தி ராமர் முன் வந்து நின்றான். ராமரின் தேர், தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. ராமரும், ராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர்.