TRB தேர்வு... 7000-க்கும் அதிகமான பணியிடங்கள்...
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடப்பாண்டில் 7000க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த நிலையில் என்னென்ன பணியிடங்களுக்கான தேர்வுகள் வரவுள்ளன, அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பச் செயல்முறை குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.

இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2022 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 7000க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர திட்டத்தை வெளியிட்டுள்ளது

தேர்வு விவரம்

ஆண்டுத் திட்டத்தின் படி, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். 3,902 இடைநிலை ஆசிரியர்கள், 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட மொத்தம், 4,989 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

SCERTயில் 167 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2022 நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.

கல்வித் தகுதி

இதில் ஆசிரியர் தகுதித் தேர்வானது, இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது. அதாவது D.T.Ed படித்தவர்களுக்கானது. இரண்டாம் தாளானது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. அதாவது B.Ed படித்தவர்களுக்கானது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு D.T.Ed படித்திருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டமும், B.Ed-ம் முடித்திருக்க வேண்டும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் Ph.D முடித்திருக்க வேண்டும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு, பொறியியல் பணியிடங்கள் என்றால் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பணியிடங்கள் என்றால் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகுகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://www.trb.tn.nic.in/Default.htm என்ற இணைய தள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தேர்வுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை சரிபார்த்துக் கொண்டு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.