தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தின் பிரதரான கட்சிகளான திமுக, அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அதிமுக – பாஜக இடையே நடைபெற்று வந்த கூட்டணி பேச்சுவார்த்தையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
பாஜக ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தமிழக தலைமை முடிவு எடுத்துள்ளது. தமிழக பாஜகவின் முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். அதிமுக உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும்.
இன்று அமாவாசை என்பதால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்பதால் தனித்துப்போட்டியிடுகிறோம். மத்திய அரசின் திட்டங்கள் வீடுகள் தோறும் இருப்பதால் பாஜக தனித்து களம் காண்கிறது.” என்று கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜகவினரும், அதிகமுகவினரும் ட்விட்டரில் மேடை போட்டாமல் விவாதம் நடத்தி வருகின்றனர்.
இதில் அதிமுக ஆதரவாளர்கள் சிலர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து தான் அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும், இதனால் நஷ்டம் அவர்களுக்கு தான் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என எடுக்கப்பட்ட முடிவு சரியான முடிவு தான் என்றும், குறைந்த பட்சம் அது கட்சியின் பலம் மற்றும் நிலை குறித்த சில அறிகுறிகளையாவது கொடுக்கும். முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் எதிர்காலத் திட்டத்தை உருவாக்க முடியும்.” என பாஜக ஆதரவாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாஜக ஆதரவாளரோ, “மிகவும் தைரியமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
சில அதிமுக ஆதரவாளர்களோ, பாஜக வின் இந்த முடிவை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.