விமான விபத்துகளில் பலியான விமானி ஜோடிகள்... 2006இல் கணவர், 2023இல் மனைவி
நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து, பொகாரா நகருக்கு புறப்பட்ட விமானம் நேற்று (ஜன. 15) தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் விமானமான இதில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணித்தனர். மேலும், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், தென்கொரியாவை சேர்ந்த 2 பேர், ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 15 வெளிநாட்டின் அந்த நேபாள விமானத்தில் பயணித்துள்ளனர்.

காட்மாண்டூவில் இருந்து நேற்று காலை 10.33 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டதாக கூறப்படும் நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு நகரங்களுக்கும் இடையே 25 நிமிடம் பயண நேரம் என்றும் பொகாரா விமான நிலையம் அருகே தான் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த விபத்தில் 68 பேரின் உடல்கள் கிடைத்துள்ளது. ஆனால், யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த விபத்துக்குள்ளான விமானத்தின் கோ-பைலட் அஞ்சு கதிவாடா குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதில், அஞ்சுவின் கணவரும் விமானிதான் என்றும், அவரின் கணவர் 2006ஆம் ஆண்டு இதேபோன்ற விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என தெரியவருகிறது.

அதாவது, 2006ஆம் ஆண்டு, இதே எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஜூம்லா நகரில் விபத்துக்குள்ளான நிலையில், அந்த விமானத்தின் விமானியான  தீபக் பொக்ரேல் உயிரிழந்தார். இவரின் மனைவிதான் அஞ்சு. கணவர் இறந்ததை அடுத்து, காப்பீடு மூலம் கிடைத்த தொகையை வைத்து விமானிக்கு பயின்றார். 2010ஆம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றிய அஞ்சு இதுவரை, 6 ஆயிரத்து 400 மணிநேரங்கள் விமானத்தை வானில் இயக்கியுள்ளார். அந்த அளவிற்கு அனுபவம் இருந்தும், தனது கணவரை போன்றே இவர் ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் விமானியாக இருந்து இரண்டு விமான விபத்துகளில் சிக்கியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.