பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகின. தமிழ் திரைத்துறையின் இரண்டு மெகா ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஜாக்பாட் அடித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் வெளியிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை துணிவு பாக்ஸ் ஆஃபீஸில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் வாரிசு படம் இருக்கிறது. முதல் நாளில் 19.43 கோடியை வசூலித்த வாரிசு அடுத்தடுத்த நாட்களில் முறையே பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் சரிவைக் கண்டது. துணிவுக்கும் வசூல் குறைந்தாலும் வாரிசு படத்தைக் ஒப்பிடும்போது முன்னணியில் இருக்கிறது. நான்காவது நாளான இன்றும் வாரிசு தொடர்ந்து 2ம் இடத்திலேயே இருக்கிறது.
உலகளவில் ஒப்பிடும்போது துணிவைக் காட்டிலும் வாரிசு முதல் இடத்தில் உள்ளது. துணிவு படம் இதுவரை 93 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கும் நிலையில், விஜய்யின் வாரிசு 100 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த ஆண்டின் 100 கோடி வசூல் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் படம் வாரிசு என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. துணிவு நாளைக்குள் 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் விடுமுறை என்பதால் இரண்டு படங்களுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாலை காட்சிகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.