தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஞானபீடமான திருவானைக்காவல் அன்னை அகிலாண்டேஸ்வரி அம்மன் வரலாறு
*தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஞானபீடமான
#திருவானைக்காவல் அன்னை
#அகிலாண்டேஸ்வரி அம்மன் வரலாறு*


தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள். பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அதுவே முக்கியம். அந்த ஞானத்தை அள்ளி வழங்குபவள் அகிலாண்டேஸ்வரி.

திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச் சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். இத்திருத்தல அகிலாண்டேஸ்வரி கம்பீரமான, திருத்தோற்றமுடையவள்; கருணை பொழிகின்ற திருமுக நாயகி; வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருள்பவள். இந்த சிவசக்தி ஸ்வரூபிணியை நாமும் பணிந்து அருள் பெறுவோம்.

ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி, அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த, ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வருகிறாள்.

"நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?'' என்று கேட்கிறாள். அவள் குரலில் ஏளனம். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.
"தேவி! ஆம்... நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக இருக்கிறான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அங்கு நாம் குரு } சிஷ்யை என்ற முறையில் திகழ்வோம்'' என்கிறார்.

அவரின் உத்தரவை ஏற்று அன்னை பூமிக்கு வருகிறார். திருவானைக்காவில் காவிரி நதியில் நீர் எடுத்து லிங்கம் அமைத்து ஈசனை வழிபடுகிறார். புராண காலத்தில் இத்தலம் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அதில் ஒரு மரத்தடியில் ஜம்பு என்னும் முனிவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார். இறைவன் அளித்தது என்று முனிவர் விதையையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

விதை வயிற்றுக்குள் வளர்ந்து கிளைகள் தலைக்கு மேல் பரவ, சிரசு வெடித்து முனிவர் முக்தி அடைந்தார். எனவே இறைவன் "ஜம்புகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

அகிலத்தைக் காக்க அம்பிகை தவம் இருந்ததால் "அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள். இங்கு அன்னை ஈசனிடம் குரு - சிஷ்யையாக இருந்து ஞான உபதேசம் பெற்றதால், இக்கோயிலில் இறைவன், இறைவிக்கு திருக்கல்யாணம் கிடையாது.

அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். இது இத்தல விசேஷமாகும்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள்.
பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீ சக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருட்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள்.
வேதியரிடம், “”நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,’’ என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “”கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,’’ என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர். 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.அகிலாண்டேஸ்வரி, வாராஹி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறாள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியின் தரிசனத்தால் இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் ஒளி பெற்று விளங்குகின்றன.
இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ் வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று மாணவ, மாணவியர் அதிகம் பேர் வந்து, தம் கல்வி மேம்பட வேண்டி செல்வர்.

இத்தலம் சோலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. முற்காலச் சோழர்களில் ஒருவரான கோட்செங்கட்சோழன் என்பவரால் கட்டப்பட்டது இக்கோயில். சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

மொத்தம் ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில், நான்காவது திருச்சுற்றில் உற்சவமும், தேரோட்டமும் நடைபெறும். இக்கோயிலில் நாவல் மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் சக்தியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பிகை சிவனைப் போலவும், சிவன் அம்பிகையைப் போலவும் வேடமிட்டு வந்து பிரம்மனின் சாபம் தீர்த்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

'துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவர்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே'
-என்று  இத்தலத்து ஈசனைப் புகழ்ந்து போற்றுகிறார் திருநாவுக்கரசர்.

சிலந்தியும், யானையும், சாப விமோசனம் பெற்று மறுபிறவி எடுத்த தலம். அன்னை ஞான உபதேசம் பெற்ற தலம், நீர் லிங்கம் உடைய தலம் என்று பல சிறப்புகளைப் பெற்றது திருவானைக்காவல். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.