பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும்
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் :


குடை தானம் , செருப்பு தானம் தங்கம், வெள்ளி, உத்திராட்சம், குடை, விசிறி, ஆடை, நீர், மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, புத்தகம், பேனா, பென்சில், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது படுக்கை விரிப்பு முதலான பொருட்களை வாழ்வில் ஒருமுறையேனும் தானம் வழங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்.

புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு இவைகளை புதியதாக வாங்கி தானமாக கொடுங்கள்.

முக்கியமாக நாம் கொடுக்கப்படும் தானம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

நமக்கு பயன்பட வில்லை என்பதற்காக, நாம் பயன்படாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கி தானமாக கொடுப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.

இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதன்மூலம் நமக்கு பலனும் கிடைக்காது.

 பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் :

நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன், அந்த தானத்தை செய்தால் அந்த பலன் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது.

அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். மேலும் வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் தன்னாலே வரும்.

பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன.

ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.
ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதை உணர்த்தும் விதமாக போஜராஜன் தொடர்புடைய கதை ஒன்று உண்டு.
காலணி தானமும் யானை சவாரியும்!
போ ஜராஜன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கலையார்வமும் ரசனையும் மிக்க அவன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர்.

ஒரு நாள் அவன் அவையிலிருந்த அரசவைப் புலவர்களில் ஒருவர் அரண்மனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

சூரியன் சுட்டெரிக்கும் பகல் அது. தான் செல்லும் வழியில் ஒரு பாரமிழுக்கும் வயதான தொழிலாளி செருப்பு அணியாத காலுடன் நெல் மூட்டைகள் அடங்கிய வண்டியை இழுத்து செல்வதை பார்த்தார்.

 அதை கண்டு மனம் பொறுக்காத புலவர், தனது காலனியை கழற்றி அந்த தொழிலாளிக்கு கொடுத்தார்.

“ஐயா… எனக்கு காலணியை கொடுத்துவிட்டு நீங்கள் எவ்வாறு நடந்து போவீர்கள்? வெயில் உங்களை மட்டும் வருத்தாதா என்ன? எனக்கு காலணி வேண்டாம்.

உங்கள் இரக்க குணத்துக்கு நன்றி!” என்றார் அந்த முதியவர்.
“ஐயா பெரியவரே நான் சும்மா தான் நடந்து செல்கிறேன். என்னால் இந்த வெயிலை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இந்த முதுமையிலும் பாரமிழுக்கும் உங்களால் முடியுமா? எனவே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி காலணியை அவரிடம் கொடுத்துவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் உடனே அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார்.

அப்போது பட்டத்து யானையுடன் வந்த அரண்மனை பாகன், ஆஸ்தான புலவர் ஒருவர் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து வருவதை பார்த்து அவரை யானை மீது ஏற்றிக்கொண்டு அரண்மனை நோக்கி சவாரியை தொடர்ந்தான்.

அது சமயம் எதிரே ரதத்தில் வந்த போஜராஜன், “என்ன புலவரே… உங்களுக்கு எப்படி யானை சவாரி கிடைத்தது?” என்றான் ஆச்சரியத்துடன்.
“எல்லாம் தானத்தின் மகிமை தான் மன்னா” என்றார் புலவர் பதிலுக்கு.
“அப்படி என்ன தானம் செய்தீர்கள்?”
“என் பழைய காலணியை வெயிலில் நடக்க சிரம்மப்பட்ட ஒரு முதியவருக்கு தானமளித்தேன்.

அதன் பலனாக எனக்கு பட்டத்து யானை மேல் அமர்ந்து சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது மன்னா!” என்றார்.
போஜனும் தானத்தின் பலனை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

32 வகையான அறங்கள்
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்ததாக கூறுவார்கள்.

அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தூய தமிழில் : அறம் வளர்த்த நாயகி.

இந்த 32 வகை அறங்களில் மக்கள் அனைவரும் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப செய்யக்கூடிய அறங்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது.

பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன.