தமிழக பட்ஜெட்2023: சுய தொழில் கடன் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் பிடிஆர்
தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. நிதி நிலைமை கவலையளிக்கும் விதமாக இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அல்லது ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைகளுக்கு மீறியதாகவோ இல்லை. ஆனால், மிகவும் சீராக இருந்த நிதிநிலைமை மோசமான நிலைக்கு சென்றது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்ட பின்னர் நிதிநிலையை மேம்படுத்தும் வகையிலும், மிகப்பெரிய சீர்த்திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பட்ஜெட் 2023 இன்று  பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில் தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில்முனைவோர்களையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும்போது உலகளாவிய பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அவர்களுக்கான கடன் உதவிகள் உள்ளிட்ட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.