பிதுர் சாபம் தீர்க்கும் திருப்புவனம்
பிதுர் சாபம் தீர்க்கும் திருப்புவனம்
பிதுர் சாபம் தீர்க்கும் தலமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளது. இங்குள்ள திருப்புவனநாதரை வழிபட்டால் முன்னோர் ஆசியால் குலம் தழைக்கும்.
காசியைச் சேர்ந்த தர்மயக்ஞன் என்பவர் தன் தந்தையின் அஸ்தியுடன் ராமேஸ்வரம் சென்றார். உறவினர் ஒருவரும் அவருடன் வந்தார். வழியில் சிவத்தலமான திருப்புவனத்தில் ஓய்வு எடுத்தனர்.
அப்போது அஸ்தியை பார்த்த உறவினர், அது பூவாக மாறியிருக்க கண்டார். ஆனால் அவர் தர்மயக்ஞனிடம் தெரிவிக்கவில்லை.
ராமேஸ்வரத்தை அடைந்த பின், கலசத்தை திறந்த போது பூக்கள் மீண்டும் அஸ்தியாக இருந்தது. உடனே உறவினர் திருப்புவனத்தில் தான் கண்டதை தெரிவித்தார்.
வியந்த தர்மயக்ஞன் அஸ்தியுடன் மீண்டும் இத்தலத்திற்கு வந்தார். மீண்டும் அஸ்தி பூவாக மாறியது. அதை வைகையாற்றில் கரைத்து விட்டு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.
காசியை விட 16 மடங்கு புண்ணியம் மிக்க இங்குள்ள சுவாமி திருப்பூவனநாதர் என்றும், அம்மன் சவுந்திர நாயகி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு திதி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் நற்கதி அடைவர். அவர்களின் ஆசியால் குடும்பம் தழைக்கும்.
திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்தாள். சிவபக்தையான அவள் பூவனநாதருக்கு தங்கச்சிலை அமைக்க விரும்பினாள். இதை நிறைவேற்ற சித்தர் வடிவில் சிவனே நேரில் வந்தார்.
அவளது வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை தீயில் இட்டால் பொன்னாக மாறும் என்றும் கூறினார்.
பொன்னனையாளும் அவ்வாறே செய்து தங்கச்சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் மயங்கி அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.
அவளது நகக்குறியை இக்கோயிலில் உள்ள உற்சவர் சிலையில் இப்போதும் காணலாம்.
ஞான சம்பந்தர் இங்கு வந்த போது வைகை ஆறு எங்கும் சிவலிங்கமாக தெரிந்ததால் கால் வைக்க அஞ்சினார். ஆற்றின் மறுகரையில் நின்றபடியே பாடினார். அப்போது சன்னதியில் சிவனை மறைத்து நின்ற நந்தி சற்று விலகியது. அதன்படி இப்போதும் கோயிலில் நந்தி விலகியே உள்ளது.
செல்வது எப்படி:
மதுரை – மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது