சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
4 பங்கு அரிசி மாவு மற்றும் ஒரு பங்கு உளுமத்தம்மாவு சேர்த்து அரைத்து அந்த மாவில் இட்லி செய்யப்படுகிறது. ஆனால் இந்த மாவை அரைக்கும்போது பக்குவமாக அரைப்பது மிகவும் அவசியம். இட்லிக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகவோ அல்லது மாவு கட்டியாகவோ இருந்தால் இட்லி சரியாக பதத்திற்கு வராது.
மாவில் உளுந்து அதிகமாகிவிட்டால் இட்லி துணியோடு ஒட்டிக்கொள்ளும். அதேசமயம் உளுந்து குறைவாகி விட்டால், இட்லி கல்லு போன்று வரும். இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக மாவு அரைக்கும்போது பக்குவத்துடன் அரைப்பது நல்லது. ஆனாலும் மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிவிட்டாலோ அல்லது தண்ணீர் அதிகமாகிவட்டாலோ சிறிதளது சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை இட்லி மாவில் ஊற்றி கரைக்கலாம். அப்போது இட்லி மிருதுவாக துணியில் ஒட்டாமல் வரும்.
சாதத்திற்கு பதிலாக அவலை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊற வைத்து, அரைத்து இட்லி மாவில் சேர்த்தாலும் இட்லி நன்றாக வரும். இட்லி மாவில் உளுத்தம்மாவு குறைவாக இருந்து இட்லி கல்லுமாதிரி வந்தால், அப்பளத்தை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மிக்ஸியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து இட்லி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இட்லி சாஃப்டாக வரும்.
சில சமயம் இட்லி மாவில் தோசை ஊற்றினால் தோசை சரியாக வராது. அந்த சமையத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் அரிசி மாவை கொஞ்சமாக இட்லி மாவுடன் சேர்த்து கரைத்து அதன் பின்பு தோசை ஊற்றினால் தோசை உடனடியாக மொறுமொறுவென வரும். இரவில் அரைத்துவைத்த மாவு காலையில், நீர்த்துவிட்டது என்றால், இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அந்த மாவை எடுத்து இட்லி வார்த்தால் நன்றாக வரும். மாவு ரொம்ப கெட்டியாக, கொஞ்சமாக ஐஸ் வாட்டரை ஊற்றி அந்த மாவை கரைத்து இட்லி ஊற்றி வைத்தாலும் இட்லி சரியான பக்குவத்தில் கிடைக்கும்.