மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
மருத்துவ குணமிக்க காய்கறி வரிசையில் முள்ளங்கி முக்கிய இடத்தை பிடிக்கிறது. இவற்றில் நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்துகள் அதிக அளவில் நிரம்பியுள்ளதால் அவை, மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகின்றன. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இவை நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளன.

முள்ளங்கியை ஜூஸாக மாதத்திற்கு ஒருமுறை பருகி வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை பறந்து போகும். இவற்றில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. மேலும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் முள்ளங்கி ஜூஸ் நல்ல பலன் தருகிறது.

முள்ளிங்கியை சூப் பருகி வந்தால் அவற்றின் அனைத்து சத்துக்களும் நமக்கு அப்படியே கிடைக்கின்றன.

முள்ளங்கி சூப் தேவையான பொருட்கள்

முள்ளங்கி இலை – 1 கப்
சிறிய முள்ளங்கி – 1
சீரகம் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – சிறிதளவு
மிளகுத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்.

முள்ளங்கி சூப் ஈஸி செய்முறை

முதலில் முள்ளங்கி இலைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு, முள்ளங்கியின் தோல்களை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதன் பின், ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சீரகத்தை இட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இவையனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்.

இப்போது, மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்திற்கு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்கவும்.

பின்னர் கீழே இறக்கினால் சத்தான முள்ளங்கி சூப் தயாராக இருக்கும்.