பனை ஓலை கொழுக்கட்டை...
திருக்கார்த்திகை அன்று தென் தமிழகத்தில் வீடுகளில் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம் மற்றும் ஓலையைக் கொண்டு இந்த பாரம்பரிய பண்டம் செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – முக்கால் கிலோ

கருப்பட்டி – அரை கிலோ

ஏலக்காய் தூள்- 8

தேங்காய் – ஒரு மூடி துருவியது

பனை ஓலை – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசியை நன்கு கழுவி ஊற வைத்து நிழலில் உலர்த்தி, மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும். பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்டவும்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், மாவு சேர்த்து வறுக்கவும். கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்.

அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த ஏலம், சுக்குப் பொடி, கருப்பட்டி பாகு இவற்றுடன் தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்.

வெட்டிய பனை ஓலையில் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை வைத்து ஓலையை சேர்த்து மூடவும். அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே தெரியாதவாறு ஓலையை நாரில் கட்டி விட வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

இதை அப்படியே இட்லிச் சட்டி அல்லது குக்கரில்  அடுக்கி வைத்து நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.