உளுந்தே வேண்டாம்; நினைத்த நேரத்தில்; அதுவும் கால் மணி நேரத்தில் மெது வடை தயார் செய்ய முடியும்.
மெதுவடை, அனைவருக்கும் பிடித்தமான ஒரு பதார்த்தம்! ஆனால் இதற்காக உளுந்தை ஊறவைத்து, அரைத்து முன்கூட்டியே தயார் ஆக வேண்டியிருப்பதால், பலரால் நினைத்த நேரத்தில் மெது வடையை தயார் செய்ய முடிவதில்லை.
உளுந்தே வேண்டாம்; நினைத்த நேரத்தில்; அதுவும் கால் மணி நேரத்தில் மெது வடை தயார் செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா? இந்த உடனடி மெதுவடையை தயார் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.
உடனடி மெதுவடை தயார் செய்யும் முறை வருமாறு: ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு – 1 கப் (250 கிராம்), மோர் – 1 கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 1 கப் ஆகியவற்றை சேருங்கள். அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் முதலில் கரைத்துக் கொள்ளவேண்டும்.
மோர் இல்லை என்றால், கெட்டித் தயிரில் தண்ணீர் சேர்த்து கரைத்து எந்த கப்பில் பச்சரிசி மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் மோரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கப்பில் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு கலவையை அதில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
அரிசி மாவு என்பதால் கொஞ்சம் கட்டி பிடிக்க ஆரம்பிக்கும். நீங்கள் கரண்டியை வைத்து நன்றாக கிளறி விடவேண்டும். 2 முதல் 3 நிமிடத்திற்குள் அரிசிமாவு கட்டிப் பதத்திற்கு வரத்தொடங்கும். அதாவது மாவு வெந்துவிடும். இந்த மாவு அதிகம் கட்டியாகி விடவும் கூடாது. மிகவும் தளதளவெனவும் ஆகிவிடக்கூடாது. அதாவது, உளுந்த மாவை வடைக்காக அரைத்தால் எப்படி அரைப்பீர்களோ, அதேபோல் பக்குவத்தில் இந்த மாவை கிளறி கொள்ளுங்கள்.
பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இவைகளை அந்த மாவோடு சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். அதன்பிறகு அடுப்பிலிருந்து மாவை கீழே இறக்கி வைத்து விடவும்.
இதன்பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையையும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக கிளறுங்கள். மாவு கை பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருங்கள். அதன் பின்பு கையில் லேசாக எண்ணெயைத் தொட்டு, மாவை எடுத்து மெது வடை போல தட்டி எண்ணெயில் விட வேண்டும்.
தீயை மிதமாக வைக்கவும். மிதமான தீயில் வேகும் போது தான் அரிசி மாவில் இருக்கும் உள் பக்கமும் வெந்து, வடை சுவையாக இருக்கும். பொன்னிறம் வந்தவுடன், வடை இலேசாக மிதக்க ஆரம்பிக்கும். அப்போது வடையை எடுத்து சுடச்சுட பரிமாறலாம். சுவையான மெதுவடை உளுந்து இல்லாமல் தயார் செய்யும் முறை இதுதான். தேங்காய் சட்னி இதற்கு உகந்த சைட் டிஷ் ஆகும்.