கோடைகால வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. இந்த சூழலில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளையும், பானங்களையும் தெரிவு செய்துகொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக தயிர் அல்லது மோரில் செய்யப்படும் உணவுகளை சேர்த்துக் கொள்வது கூடுதல் நன்மை பயக்கும்.
அந்த வகையில் தயிரில் தயார் செய்யப்பட்ட மோர் குழம்பை அவ்வப்போது நமது உணவுகளோடு எடுத்துக் கொள்ள வேண்டும். மோர் குழம்பு என்றால் இது ஓர் வகை குழம்பாக இருக்குமோ? இதை தயார் செய்ய நிறைய நேரம் செலவிட வேண்டுமோ? என நினைக்க வேண்டாம். இந்த வகை குழம்பு செய்வது மிகவும் எளிமையான ஒன்றாகும். அதோடு உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
சரி…, இப்போது மோர்க் குழம்பு செய்யத் தேவையான பொருட்களையும், எளிமையான செய்முறையும் பார்க்கலாம்.
மோர்க் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
1 கப் – தயிர்
1/2 கப் – தேங்காய் துருவல்
3 – பச்சை மிளகாய்
1/2 டேபிள் ஸ்பூன் – கடலை பருப்பு (20 நிமிடம் தண்ணீர் ஊறவைத்தது)
1/2 டீஸ்பூன் – சீரகம்
2 – சின்ன வெங்காயம்
சிறிய துண்டு – இஞ்சி
1/2 டீஸ்பூன் – மஞ்சள் தூள்
1டேபிள் ஸ்பூன் – எண்ணெய்
1 கிள்ளும் அளவு – பெருங்காயம்
1/2 டீ ஸ்பூன் – உளுந்தம் பருப்பு
கொஞ்சம் கடுகு
3 – காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
வெள்ளரிக்காய்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காயை வேக வைக்கவும். இதற்கிடையில் ஒரு மிக்சி எடுத்து அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், முன்னரே ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அவற்றை நன்கு பொடியாக அரைத்து விடவும். அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
மறுபுறம், நாம் வேகவைத்த வெள்ளரிக்காய் நன்றாக வெந்தததும், அவற்றோடு சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். இப்போது அவற்றை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு நாம் அரைத்து வைத்துள்ள கலவையை வேகவைத்த வெள்ளரியோடு சேர்த்து கொள்ளவோம். இந்த கலவைக்கு குறைந்தது 2 முதல் 3 கொதி தேவை. எனவே அதுவரை நாம் அவற்றை வேக விடுவோம். அவை கொதித்ததும்
கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
இப்போது, ஒரு சிறிய கடாயை எடுத்து தாளிக்க தயார் செய்யவோம். கடாயில் முதலில் எண்ணெய் ஊற்றவும். பிறகு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் தயிரை கடைந்து, கீழே இறக்கி வைத்துள்ள கலவையோடு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்வோம். பிறகு தனியாக தாளித்த தாளிப்பை அவற்றோடு சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸ் செய்து கொள்வோம். இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த வெள்ளிரிக்காய் மோர்க்குழம்பு தயாரக இருக்கும். இதை உங்கள் உணவுகளுடன் பரிமாறி சுவைக்கவும்.