கேரளா புட்டும் கடலைக் கறியும்: அருமையான காலை உணவுக்கு இதை ட்ரை பண்ணுங்க!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக புட்டு உள்ளது. காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் புட்டுவை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இந்த புட்டிற்கு ஏதுவான சைடிஷ்ஷாக கடலைக் கறி உள்ளது. இதன் சுவை அல்டிமேட்டாக இருக்கும். மேலும், இதை தயார் செய்வதற்கான நேரமும் மிகக் குறைவு தான்.
இப்போது, புட்டும் கடலைக் கறியை கேரளா ஸ்டைலில் தயார் செய்வதற்கான ஈஸியான செய்முறையை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்
இஞ்சி
பூண்டு
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 2
கொண்டக்கடலை
உப்பு – தேவையான அளவு
கடலைக் கறி மசாலா செய்ய
தேங்காய் எண்ணெய்
கறிமசாலா பட்டை – 3
கிராம்பு – 2
ஏலக்காய் -2
சின்ன வெங்காயம்
தேங்காய் துருவல் – 1 சிறிய கப்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கார மசாலா – காரத்திற்கேற்ப
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு குக்கர் அல்லது கனமான பாத்திரம் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் இஞ்சி மற்றும் பூண்டை தட்டியோ அல்லது துருவியோ சேர்த்துக்கொள்ளலாம். இவை நன்றாக வதங்கி பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து வதக்கவும். அவற்றோடு முந்தின நாள் இரவு ஊற வைத்த கொண்டக்கடலை சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
நாம் 2 கப் கடலை எடுத்துக்கொண்டதால் அவற்றுக்கு 4 கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும் எனவே 4 கப் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்வோம். குக்கரில் வேக வைக்கும் போது கடலை தண்ணீரில் ஊறியதைப் பொறுத்து விசில் அளவை கணக்கீட்டு கொள்ளவும். பாத்திரத்தில் ஒருவேளை வேக வைத்தல் அதற்கேற்ப அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும்.
இதற்கிடையில் கடலைக் கறிக்கான மசாலாவை தயார் செய்து விடலாம்
தனியாக சிறிய கடாய் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். பிறகு கறிமசாலா பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெயில் நன்கு பொறிய விடவும். இப்போது அவற்றோடு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு 1 சிறிய கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் காரத்திற்கேற்ப கார மசாலா சேர்த்து வதாக்க்கவும். இந்த கலவையை நன்கு வதக்கிய பிறகு ஆற வைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளலாம்.
அதன் பிறகு புட்டு தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.
புட்டு மாவு 11/2 கப் எடுத்துக்கொள்ளவும். தேங்காய் கலந்து வருத்திருந்தால் மிகவும் நல்லது. அவற்றை ஒரு கப்பில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். மாவு பிசையும் போது கவனமாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மாவை நன்றாக பிசைந்த பிறகு அந்த பாத்திரத்தை மூடியால் மூடிவிடலாம்.
நன்கு ஊறிய மாவை எடுத்து அவற்றை புட்டு செய்ய வழக்கமாக செய்யப் பயன்படும் பாத்திரத்தில் செய்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது புட்டு செய்வதற்கான பாத்திரத்தை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.
இப்போது முன்பு வேக வைத்த கடலை நன்றாக வெந்து இருக்கும். அவற்றுடன் நாம் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை 1 கப் தண்ணீர் விட்டு சேர்த்து கொள்வோம். பிறகு சில நிமிடங்களுக்கு வேக வைப்போம். அவை கொதிக்கும்போது அவற்றுடன் இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக்கொள்வோம்.
அவை கடலைக் கறிக்கு சுவையையும், நல்ல மணத்தையும் தரும். இவையனைத்தும் கொதித்த பிறகு நீங்கள் முன்னர் செய்து வைத்துள்ள புட்டுடன் சேர்த்து பரிமாறி ருசிக்கவும்.