மொறுமொறு சேப்பங்கிழங்கு வறுவல்; 10 நிமிசத்துல செஞ்சு அசத்துங்க!
சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன. இவற்றை சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் நன்றாக சிவந்து வரும். அவ்வளவாக கொழகொழப்பு தெரியாது. நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் செய்யும்போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும். இதே போல் இவற்றுடன் பூண்டைத் தட்டிப் போடுவது நல்ல வாசனை மற்றும் சுவையைக் கொடுக்கும்.

இவ்வளவு சுவை மிகுந்த சேப்பங்கிழங்கில் மொறுமொறுவென வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ (பகுதியாக வேக வைத்து தோல் நீக்கியது)
கடலை மாவு – 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டீ ஸ்பூன்
உப்பு

செய்முறை

சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய முதலில் மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். எனவே, அதற்கு ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அவற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவும்.

இப்போது, முன்பு வேக வைத்து தோல் நீக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அவற்றை முன்பு தயாரித்து வைத்துள்ள மசாலாவுடன் நன்கு மிக்ஸ் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சேப்பங்கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் இட்டு பொறித்து எடுக்கவும். கிழங்கை 5 முதல் 6 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதுமானது. இப்படி வேக வைத்து எடுக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த சேப்பங்கிழங்கு வறுவல் தயாராக இருக்கும். இவற்றை சாம்பார் அல்லது தயிர் சாதாத்தோடு சேர்த்து கொண்டால் செம்ம டேஸ்டியாக இருக்கும்.