இரும்புச் சத்தை அதிகரிக்கும் முருங்கைக் கீரை சூப்
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. முற்றாத முருங்கை இலை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதில் நாம் சேர்க்கும் நெய் முருங்கை இலையோடு சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை முயற்சி செய்யலாம்.
முருங்கைக் கீரை சூப் செய்யத் தேவையான பொருட்கள்:-
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 5
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
முருங்கைக் கீரை சூப் செய்முறை:-
முதலில் கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு முருங்கை இலையில் உள்ள காம்புகளை நன்றாக ஆய்ந்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றில் தண்ணீர் விட்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீ மூட்டவும். பாத்திரம் சூடாகிய பின்னர், அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும், அதோடு ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை அவற்றோடு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்போது அவை சேர்ந்து நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடதிற்கு
சுண்ட காய்ச்சவும். நீங்கள் சேர்த்த 2 டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரும் வரை அவ்வாறு செய்ய வேண்டும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கரண்டியில் முருங்கை இலை சூப்பை எடுத்து பரிமாறலாம். கொஞ்சம் சூடாகவே இதை அருந்துவது உடலுக்கு நல்லது. காரம் அதிகம் சேர்ப்பர்வர்களாக இருந்தால், சிறிதளவு மிளகுத் தூள், வெள்ளைப் பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.