முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வரும் இந்த முருங்கை மரத்தின் இலைகளை காய வைத்து, பொடியாக்கி காலை வேளையில் தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முருங்கையில் எப்படி சுவையான சாம்பார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
முருங்கைக் கீரை சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்:
குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் வேக வைக்க:-
துவரம் பருப்பு – 200 கிராம்
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
(நன்கு மசிய வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்)
தாளிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
சீரகம் – 1/4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
(அல்லது) மல்லி தூள், மிளகாய் தூள் கலந்த கலவை – 2 ஸ்பூன்
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். தொடர்ந்து தாளிக்க மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
இதில் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கிய பிறகு அவற்றுடன் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு கிளறிய பின்னர் முன்பு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு கலவையை இவற்றுடன் சேர்க்கவும். பருப்பு வேக வைத்த பாத்திரத்தை அலசிய தண்ணீரையும் இதில் சேர்த்துக்கொள்ளவும்.
மேலும் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடியால் மூடி 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
பிறகு, நெல்லி அளவு ஊற வைத்த புளி கரைசலையும், பொடியாக நறுக்கிய மல்லி இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
இதன் பின்னர், பாத்திரத்தை அதே மூடியால் மூடி 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
பிறகு, தண்ணீரில் நன்கு அலசி எடுக்கப்பட்ட 1 கைப்பிடி முருங்கை இலைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். 1 நிமிடம் கொதித்த பிறகு பாத்திரத்தை கீழே இறக்கி விடவும்.
இப்போது சுவைமிகுந்த முருங்கை கீரை சாம்பார் தயாராக இருக்கும்.