தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தேங்காய் பால் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

தேங்காய் பால் – 1 கப் (கெட்டியானது)
தேங்காய் பால் – 2 கப் (தண்ணீர் கலந்தது)
காய்ந்த அல்லது வர மிளகாய் – 4
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 7 பற்கள்
கடுகு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் – 1/4 ஸ்பூன்

தேங்காய் பால் ரசம் சிம்பிள் செய்முறை

முதலில் பூண்டு மற்றும் கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.

பிறகு புளியை தண்ணீர் கலந்துள்ள தேங்காய் பாலில் சேர்த்து ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும். அவற்றுக்கு தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.

பின்னர், பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். தொடர்ந்து மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.

தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

அவற்றின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, கொதி அடங்கியதும் கெட்டி தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளவும்.

தேங்காய் பாலை கொதிக்கும் போது ஊற்றினால் அவை திரிந்து விடும். எனவே அதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

கடைசியாக கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கினால் சுவையான தேங்காய் பால் ரசம் தயாராக இருக்கும்.

இரும்பு மற்றும் நார்ச்சத்து நிரம்பி காணப்படும் இந்த வித்தியாசமான மற்றும் சுவையான தேங்காய் பால் ரசம் உங்களது உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க உதவுகிறது. இவற்றை நீங்கள் சூப் வடிவிலும் பருகி மகிழலாம்.